Tuesday, November 10, 2009

உலகின் கனவுக் கன்னி
உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர்.

மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.

பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 5/8/1962_ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.

டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.

அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, "இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்" என்று சொன்னார்.

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.

மன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள்.

மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்ததை யாரும் மறந்துவிடலாகாது.

மர்லின் மன்றோ 1926 ம் ஆண்டு ஜுன் மாதம் 1 ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மர்லின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.

வீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16_வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.

ஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது. 1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்' ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள்.

எனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார்.

வாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக "போஸ்" கொடுத்தார். இதில் 250 ரூபாய் வருமானம் வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.

பத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள் 2 படக்கம்பெனிக்காரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது.

ஆனால் படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.

மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பெனி வருடத்திற்கு 55 லட்சம் ரூபாய் வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.

மர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. 3 முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3_வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ.

3_வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. எப்படி இருப்பினும், மர்லின் மன்றோவுக்கு இணையான உலகப்புகழ் பெற்ற நடிகை அவருக்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.

Wednesday, November 4, 2009

உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்
திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

திபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டுள்ளதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதயும் ஆவணப்படுத்தியுள்ளனர்.

புவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இமாலய மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருப்பதால் தான் இமாலயத்திலிருந்து உற்பத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.

குவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.

தற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று குவின் என்கின்ற ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழகம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் "கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே வர்ணித்தது ஞாபகம் இருக்கலாம். ஆனால் இப்போது இந்தப் பனிமலையும் வெகு வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.

இதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.

கிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இயற்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமென சற்றுச் சிந்தித்து செயற்படுவோமாக...

108 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம்108 வருடத்திற்கு பிறகு வரும் 'கங்கண சூரிய கிரகணம்' வரும் ஜனவரி 15ம் தேதி நிகழ்க்கிறது.

அரிய நிகழ்வாக 2010 ஜனவரி மாதம், இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளன. புத்தாண்டு அன்று முதல்நாள் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

ஜனவரி 15ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக்கிரகணம் இலங்கையின் வடக்குப்பகுதிகளில் ஓரளவு தெளிவாகத் தெரியும்.

இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்னர் 1901ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.

மீண்டும் 2019 டிசம்பர் அன்றுதான் கங்கண சூரியகிரகணம் இலங்கையில் தெரியும். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.

தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.