மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.
மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெருக்கத்தால் பெருமளவிலான மக்கள் இந்த மரபணுவில் கூர்ப்படைந்த மரபணுவையே தற்போது காவி வரும் நிலையை அடைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். எனினும் இந்த மரபணுக் கூர்ப்பைத் தூண்டும் குறிப்பிட்ட காரணியை விஞ்ஞானிகள் இன்னும் தெளிவாக இனங்காண முடியவில்லை.
அதுமட்டுமன்றி கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டுள்ள மக்கள் எயிட்ஸுக்கு எதிராக அதிக காலம் தாக்கும் பிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளமை குறித்தும் மேலும் தெளிவான விபரங்கள் அறியப்பட வேண்டி இருக்கின்றன என்று இவ்வாய்வுகளைச் செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி sickle cell அனீமியா குறைபாட்டைக் காண்பிக்கும் மரபணுவைக் கொண்ட மக்கள் மலேரியாவை எதிர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளனர் என்பதும் முன்னர் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புக்கள்.. மரபணுகள் சார்ந்து உருவாகும் அல்லது நிகழும் உடலிரசாயனக் கூறுகளின் மாற்றங்கள், நோய்களில் செய்யும் செல்வாக்குப் பற்றிய மேலதிக படிப்புக்களையும் கண்டுபிடிப்புக்களையும் செய்ய உதவியாக அமையும் என்பதை எதிர்பார்க்கலாம். இவை பிற்காலத்தில் இந்த நோய்களை எதிர்த்துப் போராடக் கூடிய பொறிமுறைகளைக் கண்டறிய உதவியாகவும் அமையலாம்.
No comments:
Post a Comment