Sunday, July 27, 2008

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பத்தை காப்பாற்றியது கிளி

அதிகாலை வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திலிருந்து, ஒரு குடும்பத்தையே காப்பாற்றியுள்ளது, அவர்கள் வளர்த்து வந்த கிளி.

தெற்கு இங்கிலாந்தில், ஹாம்ப்ஷைரில் வசிக்கிறார் பிரான்சிஸ் ஹால். இவரது மகன்கள் டிரேவர்(40), சாம்(18) ஆகியோரும் உடன் வசிக்கின்றனர். இவர்கள் மூன்று வயது ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளியை வளர்த்து வருகின்றனர். இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் சமையலறையில், மைக்ரோ ஓவனிலிருந்து ஏற்பட்ட தீ, சமையல் அறையில் பரவியது. இதையடுத்து சாம் பெயரையும், பிரான்சிஸ் பெயரையும் அழைத்து கிளி கத்தியது. தீ பரவி, ஹாலுக்கும் வந்ததை அடுத்து, கிளியின் கூச்சல் பெரிதும் அதிகமானது. கிளி அழைப்பதை உணர்ந்து விழித்து பார்த்தபோது தான் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது, மூவருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, கிளியுடன் மூவரும் உயிர் தப்பினர்.

"எங்கள் கிளி, குடும்பத்தாரின் உயிரை காப்பாற்றியுள்ளது. சரியான நேரத்தில் நாங்கள் விழித்திருக்கா விட்டால், உயிருடன் எரிந்திருப்போம். நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும், ஜன்னல் வெடித்துச் சிதறியது; வீடு முழுவதும் தீ பரவி விட்டது' என்று திகிலுடன் விவரித்தார் சாம்.

No comments: