Monday, June 14, 2010

இது நம்ம நாள்...


இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

Sunday, May 30, 2010

கறுப்பு வைரம்....

தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.

கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார். அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961_ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 1962_ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.


பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988_ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11_2_1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மண்டேலா 1962_ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.

மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11_2_1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம். இவ்வாறு மண்டேலா கூறினார்.

மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918_ம் ஆண்டு ஜுலை மாதம் 18_ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர். மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941_ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958_ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2_வது மனைவி மூலம் 2 குழந்தைகள். வின்னியை 1996 இல் விவாகரத்துச்செய்த நெல்சன் மண்டேலா அவர்கள் 1998 ஆம் ஆண்டு தனது 80 வது வயதில் கரகா மசேல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை. 1994 மே 10_ந்தேதி அவர் தென்ஆப்பிரிக் காவின் அதிபர் ஆனார். சர்வதேச ரீதியாக 250 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ள மண்டேலா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபெல் பரிசினையும் வென்றேடுத்துள்ளார்.

அவர் அதிபர் ஆனபின், 1998_ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஓய்வுபெற்ற பின்பும் பொதுத் தொண்டு செய்துவரும் நெல்சன் மண்டேலா தற்போது aids ஒழிப்பு செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.




Saturday, January 9, 2010

ராணி மஹா ராணி....


கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான "எட்டாம் எட்வர்ட்", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ஆம் திகதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12 இல் முடிசூட்டு விழா நடந்தது.

ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு சத்திர சிகிச்சை நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 06 ஆம் திகதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.

ஆறாம் ஜார்ஜ் இன் பிறகு இங்கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21 ஆம் திகதி லண்டனில் பிறந்தார். 1947 இல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் "எடின்பரோ கோமகன்" என்று அழைக்கப்படுகிறார்.

பட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 02 லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

ஊர்வலம் காலை 9:27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.

சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். இந்த முடிசூட்டு விழாவில் பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.

11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.
பிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.

பிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். "எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.

இந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

எடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், "கடவுளே! எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக!", "ராணி எலிசபெத் நீடூழி வாழ்க", "ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.

பிறகு விஷேச ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.

மறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

முடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960 ஆண்ட்ரூவும், 1964 இல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.

உலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய்.

Thursday, December 17, 2009

மாவீரன் வந்தியத்தேவன்



எப்பொழுதும் எங்கள் மக்கள் மத்தியில் நிலையான இடம்பிடித்துள்ள சக்தி FM வானொலியின் மற்றுமொரு வித்தியாசமான முயற்சி சரித்திர வானொலி நாடகத் தொடர். இதுவரை காலமும் வானொலியில் இவ்வாறான ஒரு சரித்திர வானொலித் தொடர் இடம்பிடித்ததில்லை என்பதை யாரும் மறுக்க முடியாதெனவே நான் கருதுகிறேன். இத்தொடரின் முன்னோட்ட நிகழ்ச்சிகளுக்கே எமது நேயர்களின் வரவேற்ப்பு மிகச் சிறப்பகவுள்ளமை இதன் வெற்றிக்கு சான்றேனலாம்.

இத்தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலையும், இந்திய வரலாறையும், எமது கற்பனையையும் கொண்டு உருவாகும் மிகப் பெரிய தயாரிப்பாகும். இத்தொடரை எழுதி இயக்குபவர் நண்பன் ராஜ்மோகன். சக்தியின் ஏனைய அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இலங்கையின் பிரபலமான நடக்கக் கலைஞர்கள் நடிக்கும் இந்த சரித்திரத் தொடரில் எமது நேயர்களில் நாடக நடிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து. அவர்களையும் நடிக்கச் செய்ய முயற்ச்சிகள் எடுத்துள்ளோம்.

ஊடகம் என்கின்ற நிலையில் எப்போதும் சக்தி FM தனது போருப்பையுனர்ந்து செயட்பட்டுல்லத்தை அனைவரும் பல சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளனர். அதேபோன்ற ஒரு சமூக உணர்வோடு எமது நாட்டில் இப்போது நலிவடைந்துவரும் நாடகக் கலையை ஓரளவாவது தலைநிமிரச்செய்யவே இந்த முயற்சி. இதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எமக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள :
fmvanthiyan.blogspot.com

Tuesday, November 10, 2009

உலகின் கனவுக் கன்னி




உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர்.

மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.

பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 5/8/1962_ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.

டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.

அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, "இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்" என்று சொன்னார்.

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.

மன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள்.

மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்ததை யாரும் மறந்துவிடலாகாது.

மர்லின் மன்றோ 1926 ம் ஆண்டு ஜுன் மாதம் 1 ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மர்லின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.

வீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16_வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.

ஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது. 1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்' ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள்.

எனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார்.

வாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக "போஸ்" கொடுத்தார். இதில் 250 ரூபாய் வருமானம் வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.

பத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள் 2 படக்கம்பெனிக்காரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது.

ஆனால் படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.

மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பெனி வருடத்திற்கு 55 லட்சம் ரூபாய் வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.

மர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. 3 முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3_வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ.

3_வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. எப்படி இருப்பினும், மர்லின் மன்றோவுக்கு இணையான உலகப்புகழ் பெற்ற நடிகை அவருக்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.

Wednesday, November 4, 2009

உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்




திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

திபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டுள்ளதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதயும் ஆவணப்படுத்தியுள்ளனர்.

புவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இமாலய மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருப்பதால் தான் இமாலயத்திலிருந்து உற்பத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.

குவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.

தற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று குவின் என்கின்ற ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழகம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் "கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே வர்ணித்தது ஞாபகம் இருக்கலாம். ஆனால் இப்போது இந்தப் பனிமலையும் வெகு வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.

இதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.

கிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இயற்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமென சற்றுச் சிந்தித்து செயற்படுவோமாக...