கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார். அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961_ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 1962_ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.
பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988_ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.
மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.
இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11_2_1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மண்டேலா 1962_ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.
மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11_2_1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.
ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.
நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம். இவ்வாறு மண்டேலா கூறினார்.
மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918_ம் ஆண்டு ஜுலை மாதம் 18_ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர். மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941_ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958_ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2_வது மனைவி மூலம் 2 குழந்தைகள். வின்னியை 1996 இல் விவாகரத்துச்செய்த நெல்சன் மண்டேலா அவர்கள் 1998 ஆம் ஆண்டு தனது 80 வது வயதில் கரகா மசேல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை. 1994 மே 10_ந்தேதி அவர் தென்ஆப்பிரிக் காவின் அதிபர் ஆனார். சர்வதேச ரீதியாக 250 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ள மண்டேலா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபெல் பரிசினையும் வென்றேடுத்துள்ளார்.
அவர் அதிபர் ஆனபின், 1998_ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
ஓய்வுபெற்ற பின்பும் பொதுத் தொண்டு செய்துவரும் நெல்சன் மண்டேலா தற்போது aids ஒழிப்பு செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
1 comment:
mandela is a great man.. Autobiography of mandela "long walk to freedom" seems to reveal mandela's humanity at it's most intense..it shows the human being within him..
mandela's revolutionary spirit was part of his humanity because for his people who suffered at the hands of the white leadership.....
He is a man who was forced to be revolutionary.
Post a Comment