Saturday, September 19, 2009

9-வது உலகத் தமிழ் மாநாடு

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிய மொழி இல்லையென்று சின்ன வயதிலிருந்து எல்லோரும் சொல்கிறோம். ஆனால் இந்த தமிழ் மொழிக்கு நாம் என்ன செய்கிறோமென்று கொஞ்சமாவது?


இல்லையே?

ஆனால் தமிழ்மொழியைக் காதலிக்கும், உயிருக்கு உயிராய் மதிக்கும் பலர் தமிழுக்குத் தொண்டாற்றப் பல வழிகளைத் தேடுகின்றனர். உலகில் இருக்கும் தமிழறிஞர்கள் பலரையும் ஒரே இடத்தில் கூட்டி உலகத் தமிழ் மாநாடு நடத்தும் திட்டமும் இதில் ஒன்றுதான்.

உலகத் தமிழ் மாநாடு பலமுறை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966, ஏப்ரலில் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர்களான திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகிய 9 பேரின் சிலைகள் திறக்கப்பட்டன. இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் திறக்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன. 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன் ஆவார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன.

13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறிகள் இப்போதுதான் தென்படத் தொடங்குகின்றது.
தற்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களினால் அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகளின் பின் 9 வது உலகத் தமிழ் மாநாடு தமிழகம் கோவையில் அடுத்த ஆண்டு (2010) சனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.
மேலும், ௧௩ ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள் மாநாட்டில் வாசிக்கப்படும். அப்போது தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

நமது பெருமையும், சிறப்பும் பழைமையோடு நின்றுவிடாமல் மாறிவருகின்ற வரும் உலகில் தமிழர்களாகிய நாமும் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்.

உலகளவில் தமிழ் ஆய்வில் ஆர்வத்தை உருவாக்குவதோடு கடல் கடந்து பல நாடுகளிலும் வாழுகின்ற நம் தமிழ் உறவுகளிடையே ஒற்றுமையுணர்வை வளர்க்கப் பாடுபட முயலவாவது வேண்டும்.
1995-ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முயற்சியால் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ் மீது அளவற்ற பற்றுடன், தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சியே.

வாழ்க தமிழ் வளர்க அதை வாழவைப்போர் சேவை....

1 comment:

Tamil astrology said...

உங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி