Thursday, June 26, 2008

ஷேக்ஸ்பியர் ஒரு பெண்!!!

புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.


உலகப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர் ஷேக்ஸ்பியர். அவரது பல படைப்புகள் இன்றளவும் புகழ் பெற்றவை. ஹேம்லட், ஜூலியஸ் சீசர், கிங் லியர், மெகபத், ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா, ஓதெல்லோ, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல புகழ் பெற்ற நாடகங்களையும், சொன்னட்ஸ், வீனஸ் அன்ட் அடோனிஸ், தி ரேப் ஆஃப் லுக்ரீஸ், தி பீனிக்ஸ் அன்ட் தி டர்ட்டிள் உள்ளிட்ட பல கவிதைகளையும் வடித்தவர் ஷேக்ஸ்பியர்.


உலகெங்கும் ஷேக்ஸ்பியருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் விரவிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் ஷேக்ஸ்பியர் குறித்த பரபரப்புத் தகவலை ஜான் ஹட்சன் என்ற ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.


இவரது கூற்றுப்படி ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண். யூத இனத்தைச் சேர்ந்தவர். ஷேக்ஸ்பியரின் உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் பஸனோ என்பதாகும். அமெலியா, 1611ம் ஆண்டு முதன் முதலில் எழுதிய கவிதை சால்வே டியூஸ் ரெஸ் ஜூடாரியம் என்பதாகும். ஒரு பெண்ணால் எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்ட உலகின் முதல் கவிதை இதுதான்.


அமெலியா இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவரது படைப்புகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் அமெலியா தனது படைப்புகளில் பயன்படுத்திய வார்த்தைகளும், கவிதை ஆக்கங்களும், ஷேக்ஸ்பியரின் கவிதைகளுடன் மிகவும் பொருந்தி வருகின்றன.


ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும், அமெலியாவின் படைப்புகளையும் பார்க்கும்போதும், அவர்களது ஸ்டைல் உள்ளிட்டவற்றை பார்க்கும்போதும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள் உண்மையில் அமெலியாவுடையது என்று கருத வேண்டியுள்ளது.


இது மிகப் பெரிய உண்மை. அமெலியாவின் படைப்புகளை ஷேக்ஸ்பியர் திருடவில்லை. மாறாக, ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் எழுதியவர் அமெலியாதான். அமெலியா வாழ்ந்த காலத்தில் பெண்கள் கவிதை உள்ளிட்டவற்றை படைக்க, வெளியிட அனுமதி கிடையாது. இதனால்தான் தனது படைப்புகள் வெளியுலகை எட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா கவிதைகளை வெளியிட்டுள்ளார்.


அக்காலத்து இங்கிலாந்தில் பெண்கள் இலக்கிய உலகில் நுழையக் கூட அனுமதி கிடையாது. நாடகங்கள் மட்டுமல்ல கவிதை, கதை என எதையும் எழுத அவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா தனது படைப்புகளை வடித்துள்ளார்.


அமெலியாவின் திட்டம் என்னவென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரிலேயே தனது படைப்புகள் உலகை வலம் வரட்டும். காலத்தின் கோலமாக உண்மை வெளியே வரும்போது தன்னைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான் என்கிறார் ஹட்சன்.


ஹட்சன் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து ஏராளமான பட்டங்களைப் பெற்றவர் ஆவார். ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்டவர். ஹட்சனின் இந்தக் கூற்று இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: